புத்த மகான்

புத்த மகான் நாள்

உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.

புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது வைசாகம் அல்லது விசாகம் (இலங்கையில்) (Wesak) மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை புத்தரின் இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.
1. சித்தார்த்த கௌதமர் லும்பினி (இன்றைய நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்த நாள்.
2. புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள்.
3. புத்தர் இறந்த நாள்.

இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத பூரணை நாட்களிலேயே நிகழ்ந்ததாகக் பௌத்தர்கள் நம்புகின்றனர்.

மன்னரின் மகனாக அவதரித்து மக்களின் வாழ்விற்காக அனைத்தையும் துறந்த மகான் புத்தர் பிரான். இவர் அவதரித்த நாள் புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது விசாக் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
கபிலவஸ்து என்ற நாட்டில் மன்னனின் மகனான சித்தார்த்தர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாத வராக வளர்க்கப்பட்டார். தனது 29 – வது வயதில் வெளி உலகைக் காண கிளம்பியவர் துன்பம் நிறைந்த உலக மக்களின் வாழ்க்கையைக் கண்டு அதிர்ந்து, துன்பங்களுக்கு காரணம் தேடி அலைந்தார்.

கௌதம புத்தரான சித்தார்த்தன்

கயா என்னும் காட்டுப்பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்த சித்தார்த்தன், முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞான ஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார். அதுமுதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார்.

புத்தர் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கு பயணம் சென்று தான் கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார். இறுதியில் கி.மு. 483 ல் தனது 80 – வது வயதில் தனது பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.

புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்று சம்பவங்களையும் நினைவு கூறுவதே புத்த பூர்ணிமா எனப்படுகிறது. புத்த பூர்ணிமா விழா இந்தியாவின் பீகாரில் உள்ள புத்த கயாவிலும்,  உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத்திலும் இந்தியா மட்டுமல்லாது. நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புத்த பூர்ணிமாக சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

புத்தரின் போதனைகள்

“புத்தன்” என்ற சொல்லுக்கு “விழித்தெழுந்தவன்”, “ஒளியினைக் கண்டவன்” என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். “தான்”, “தனது” என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே “நிர்வாணம்” அல்லது “நிர்வாண நிலை” என்று சொல்லுவார்கள்.

கௌதம புத்தர் பிறந்து 2,500 வருடங்கள் கடந்தும் ஞானோதயம் அடைந்த அவரின் போதனைகள் ஆன்ம சாதகர்களை இன்றும் வழி நடத்துகிறது. புத்த பூர்ணிமா நாளானது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம், மற்றும் மஹா சமாதி ஆகிய நாட்களை  நினைவு படுத்துதுகிறது.

“உலகம் முழுவதும் இன்றைக்குப் பௌத்தம் உள்ளது. உலகம் முழுவதும் பௌத்தம் பரவிடச் செய்தவர்கள் தமிழர்களே. தமிழக பௌத்த அறிஞர்கள்தான் பாலி மொழியில் பௌத்த மறைகளுக்குச் சிறந்த உரைகளை வகுத்துள்ளனர். இந்த உண்மைகளைத் தமிழர்களும் உணரவில்லை. தமிழரல்லாதாரும் பெருமளவில் அறியவில்லை. இலங்கை, பர்மா (மியான்மர்), திபெத், தாய்வான், சீன நாடுகளில் இன்றைக்கும் தமிழர்கள் எழுதிய பாலி நூல்கள் பாதுகாக்கப் படுகின்றன. இந்தியாவில் மட்டுமே பௌத்தம் தொடர்பான பல சமஸ்க்ருத நூல்கள் அழிக்கப்பட்டன.

புத்தர் தினம் புத்தருக்காக புத்தமதத்தினரால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை.

இதை புத்தர் ஜெயந்தி என்றும் விஷேகா மாதத்தில் வருவதால் விஷேகா என்றும் பவுர்ணமியில் கொண்டாடுவதால் புத்த பூர்ணிமா என்றும் பல பெயர்களில் அழைக்கின்றனர்.

புத்தருடைய பிறப்பு, இறப்பு, ஞானமடைந்த சிறப்பு என எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் போற்றும் ஒரு தினமாகவே இது கருதப்படுகிறது.

தியானம், புத்தரின் எட்டு போதனைகளை மனதில் பதிதல், புனித ஸ்நானம் செய்தல், சைவ உணவுகள் சாப்பிடுதல், அற உதவிகள் வழங்குதல் இவைகள் அன்றைய தினத்தில் கொண்டாடுபவர்களின் முக்கிய செயலாக உள்ளது.

மேலும், புத்தரின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் காட்சிகளை வரைதல், வடிவமைத்தல், அவருடைய சிந்தனைகளை கோயில்களில் பிரசங்கம் செய்தல். கோயில்களில் புத்தருக்கு அஞ்சலி செலுத்துவதும் நடைபெறும்.

இந்த தினத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளின் வருத்தமான மனநிலையை மாற்றி மகிழ்ச்சிதரும் வகையில் பரிசுகள், பண உதவிகள் வழங்குவதும் வழக்கம்.

புத்தர் தினம் – கால பாரம்பரியம்

இந்தியா, இலங்கை, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபால், இந்தோனேஷியா, கம்போடியா, தாய்லாந்து, திபெத், பங்களாதேஷ், பூடான், பிலிப்பைன்ஸ், லாவோ, வியட்நாம், மியான்மர் என உலகின் இன்னும் பல நாடுகளிலும் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு விதத்தில் கொண்டாடப்படுகிறது.

புத்தர் தினம் கொண்டாடுவதில் ஒரு நூற்றாண்டு கால பாரம்பரியம் அந்த மதத்தினரிடையே இருந்தாலும் 1950 ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற புத்த மதத்தினர் மாநாட்டில்தான் ஒரு முறைப்படுத்தப்பட்டது.

ஜப்பனில் ஒரு ட்ராகன் வானத்தில் தோன்றி எல்லோருக்கும் அந்த தினத்தில் ’சோமா’ வழங்கும் ஒரு கற்பனை நிகழ்வும் நடத்தப்படுகிறது.

தெற்கு வியட்நாமில் 1975 க்கு முன்பு புத்த தினம் பொதுவிடுமுறையாக இருந்தது. அன்று தெருக்களில் மக்களின் அலங்கார அணிவகுப்பும் நடந்தது.

மலேசியாவில் அன்று தேசிய விடுமுறை ஏழைகளுக்கு உணவு வழங்குதல், துறவிகள் குங்குமப்பூ நிறத்தில் அங்கிகள் அணிந்து புத்தர் போதனைகளை பாட, மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் ஊர்வலம் செல்வர்.

இந்தோனேஷியாவில் வைசாக் தினமாக 1983 லிருந்து பாரம்பரிய விடுமுறையாக கொண்டாடப்படுகிறது.

ஆயிரக்கணக்கான புத்த துறவிகள் ஒன்று சேர்ந்து சடங்கு மந்திரங்கள் சொல்லி மக்களை உச்சரிக்க சொல்வர்.

மேலும் கோயில்களில் தியானங்கள் கற்பிப்பர் இந்த சடங்கு ’பிரதக்ஷின’. என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. புனித நீர் பாட்டில்களும் வழங்குவர். அதை ஒளி மற்றும் ஞானத்தின் சின்னமாக பெறுகின்றனர்.

புத்தர் போதனை

புத்தர் மனிதர்களுடைய எண்ணங்களையும் செயல்களையும் மேம்படுத்த நல்ல போதனைகளை கூறிய ஒரு தீர்க்க தரிசி.

அவர் மதம் மற்றும் சடங்குகளுக்கு அப்பாற்பட்ட ஒரு துறவு வாழ்க்கையையே மேற்கொண்டார். ஆனாலும், நல்ல சிந்தனைகளுக்காக அந்த மதத்தை பின்பற்றும் குடும்ப வாழ்க்கை கொண்ட மக்கள்.

மற்ற மதங்களில் இருப்பது போல பண்டிகைகள், விழாக்கள் என புத்தத்திலும் மதநிறைவு செய்து ஒரு மனநிறைவு கொள்கின்றனர்.

பௌத்தர்களின் தேசமான மியான்மர் நாட்டில் வளரும் போ எனும் மரத்தை, புத்தர் ஞானம் பெற்ற போதிமரமாக மதித்து அம்மக்கள் வணங்கி வருகின்றனர். சுட்டெரிக்கும் கோடைக் காலத்தில், போ மரம் மழையின்றி வெயிலில் வாடுவதால், ஒவ்வோர் ஆண்டும் புத்த பூர்ணிமா அன்று அம்மக்கள் போ மரத்திற்கு தண்ணீர் ஊற்றும் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

கயா

புத்தர் ஞானமடைந்த இந்தப் புனிதத் தலத்தில் மிகப் பெரிய கோயில் வைதீக இந்து மன்னர் களான குப்தர்களாலேயே கட்டப்பட்டது. பின்னர் இஸ்லாமியப் படையெடுப்பின்போது சிதைக்கப்பட்டு இடிபாடுகளாகியது. பிறகு 15ஆம் நூற்றாண்டில் பைராகிகளான சைவத் துறவிகள் காட்டுக்குள் இருந்த இந்த இடத்தைக் கண்டுபிடித்து அதைத் தங்கள் உறைவிடமாகக் கொண்டார்கள், ஆயினும் கயாவின் பௌத்த வழிபாட்டு மரபை மதித்து, அதனைப் பாதுகாத்து வந்தார்கள். அப்போதிருந்து அந்தக் கோவிலின் நிர்வாகம் சைவ சமய ‘மஹந்த்’கள் கையில்தான் இருந்தது. மேலும், கயா ஆதி முதலே இந்துக்களுக்கும் புனிதத் தலம். பிறகு 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது வரலாற்று ஆய்வாளர்களால் பிரபலமாக்கப்பட்டு உலகெங்கும் உள்ள பௌத்தர்கள் வந்து செல்லும் புனிதத் தலமாகியது. இது வரலாறு.

போத் கயா புத்தர் தியானம் செய்து தர்மஞானம் பெற்ற இடம். தர்மசக்கரத்தை அவர் தொடங்கி வைத்து சாட்சியாகத் தொட்ட மண். அவர் ஞானமடைந்த நாள் புத்த பூர்ணிமா எனக் கொண் டா டப்படுகிறது. ஃபால்குனி நதிக்கரையில் இருக்கிறது இந்த இடம். இங்கிருந்து அவர் சாரநாத் சென்று தன் முதல் தர்மப்பேருரையை நிகழ்த்தினார்.

  போத் கயா புத்தர்  

போத் கயா

போத் கயா பற்றி ஐந்தாம் நூற்றாண்டில் பாஹியானும் ஏழாம் நூற்றாண்டில் யுவான் சுவாங்கும் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். இங்கே முதல் ஆலயம் அசோகரால் கட்டப்பட்டது. குஷானர் காலத்திலும் குப்தர் காலத்திலும் அது மீண்டும் விரிவுபடுத்திக் கட்டப்பட்டது.

போத் கயாஉட்புறம்

பிரம்மாண்டமான ஆலயமாக இருந்த போத் கயா 1203இல் பிகார் மற்றும் வங்கம் மீது படை கொண்டு வந்த சுல்தான் பக்தியார் கில்ஜியின் படைகளால் முற்றாக அழிக்கப்பட்டுக் கற்குவிய லாக ஆகியது. பக்தியார் கில்ஜிதான் நாளந்தாவையும் பிற பௌத்தத் தலங்களையும் முற்றாக அழித்தவர். அங்கிருந்த பல்லாயிரம் பிக்குகள் கொல்லப்பட்டனர் என அவரது சொந்த வரலாற் றாசிரியர்களே பதிவுசெய்திருக்கிறார்கள்.

பௌத்தம் ஏற்கனவே ஆதரவிழந்த நிலையில் இருந்தது. பௌத்தத்தை ஆதரித்த வட இந்திய சாம்ராஜ்யங்கள் குஷானர் படையெடுப்பாலும் துருக்கியப் படை எடுப்பாலும் நிலைகுலைந்து வட இந்தியா முழுக்க அரசியல் வெற்றிடம் நிலவிய காலகட்டம் அது.

மேலும் பத்தாம் நூற்றாண்டு முதலே எழுச்சி பெற்ற பக்தி இயக்கத்தால் மக்களாதரவு இல்லாமல் தத்துவார்த்த மதமாக எஞ்சி, கல்விச்சாலைகளில் மட்டுமே நீடித்திருந்த புத்தமதம் அத்துடன் அழிந்தது. ஆங்காங்கே சிறிய குழுக்களாக அது நீடித்து மேலும் ஒரு நூற்றாண்டுக்குள் மறக்கப் பட்டது. நாளந்தாவிலும் கயாவிலும் இந்துத் துறவிகள் சிலர் பிடிவாதமாக அங்கிருந்த கல்வி மரபைத் தொடர்ந்தார்கள். ஆனால் மெல்ல அவர்களும் இல்லாமலாயினர்.கயா இடிபாடுகளில் மறைந்தது.

கயா, இந்துக்களுக்கு இன்னொரு வகையில் முக்கியமான ஊர். நீர்க்கடன்கள் செய்வதற்குரிய புனிதத் தலங்களில் ஒன்று. எப்படி வட இந்தியர்களுக்கு ராமேஸ்வரமோ அப்படி தென்னகத்தின ருக்கு கயா. இதன்பொருட்டு அங்கே எப்போதும் ஏராளமான இந்துக்கள் வந்து கொண்டிருந் தார்கள். அவர்களுக்காக அங்கே ஒரு புரோகித சமூகம் உருவாகி நீடித்தது. அவர்களுக்குத் தலைமை வகிக்கும் ஒரு மடம் அங்கே உருவாகியிருந்தது. கயை முழுக்க பின்னர் எழுநூறு வருடம் இந்தப் புரோகிதர்கள் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

1880 வாக்கில்தான் உண்மையில் நாம் இன்று காணும் வடிவில் பௌத்தம் மீட்டு எடுக்கப் பட்டது. அன்று உலகமெங்கும் சிதறிக்கிடந்த பௌத்த மதப்பிரிவினர்கள் நடுவே ஒருவருக் கொருவர் அறிமுகம் இருக்கவில்லை. அவர்கள் அனைவரும் பின்பற்றுவது ஒரே மதத்தின் வெவ்வேறு பிரிவுகள் என்ற எண்ணமும் இருக்கவில்லை.

பௌத்தத்தை மீட்டு இன்றைய வடிவில் ஒரு பெருமதமாக ஆக்கியவர்கள் மூன்று வெள்ளைய ஆய்வாளர்கள். கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் [Henry S. Olcott ] அவர்கள் 1881 ல் எழுதி 1908ல் வெளிவந்த பௌத்தஞானச்சுருக்கம் [The Buddhist Catechism] என்ற நூல்தான் பௌத்தர்களுக்கு பௌத்த ஞானத்தை அறிமுகம் செய்தது. பால் காரஸ் [Paul Carus] 1894 ல் எழுதிய எழுதிய ‘புத்தரின் நற்செய்தி’ [The Gospel of the Buddha] புத்தரை உலகம் புரிந்து கொள்ள வழிவகுத்தது. ரய்ஸ் டேவிட்ஸ் [Thomas William Rhys Davids] எழுதிய பௌத்த இந்தியா [Buddhist India] பௌத்த மதத்தின் வரலாற்றைக் கட்டமைத்தது.

1881இல் கயாவில் அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்டு மகாபோதி நின்ற இடத்தையும், அசோகர் காலத்து ஆலயத்தையும் கண்டடைந்தனர். 1883 முதல் நடந்த விரிவான அகழ்வாய்வுகளின் வழியாக அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் கயாவின் புராதனமான ஸ்தூபிகளை மீட்டு எடுத்தார். ஜெ.டி. பெக்லர் மற்றும் ராஜேந்திரலால் மித்ரா ஆகியோர் ஆய்வில் இணைந்து பணியாற்றினார்கள்.

போத் கயா 2012 

இக்காலகட்டத்தில் புத்த கயையைத் தலைமை பௌத்தத் தலமாக மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பௌத்தர்களிடம் வந்தது. அதற்காக இலங்கை, பர்மா, திபெத் ஆகியநாடுகளில் செயற்குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆல்காட்டின் மாணவரான இலங்கை பௌத்தத் துறவி அநாகரிக தம்மபாலா 1891இல் அந்த இயக்கத்தை முன்னெடுத்தார்.

உண்மையில் இச்சந்தர்ப்பத்தில் இந்துக்கள் பரந்த மனத்துடன் நடந்துகொண்டிருக்க வேண்டும். அந்த இடம் மீதான பௌத்தர்களின் மரபுரிமையை மதித்து அதை பௌத்தர்களிடம் ஒப்படைக்க முன்வந்திருக்கவேண்டும். நட்பும் புரிதலும் கொண்ட ஒரு கைமாற்றம் நிகழ்ந்திருக்கவேண்டும். அது இந்தியாவின் மரபுக்கு ஏற்ற ஒரு மகத்தான வரலாற்றுத்தருணமாக இருந்திருக்கும்.

அந்த நிலை நோக்கி உயர வெறும் புரோகித மடாதிபதியான சங்கராச்சாரியாரால் முடியவில்லை. அந்நிலம் காலங்காலமாகத் தங்களுக்குரியது என கயையின் சங்கரமடத்தின் தலைமை மகந்த் உரிமை கொண்டாடினார். நிலத்தை விட்டுத்தர மறுத்து நீதிமன்றம் சென்றார். இது அப்போதே உலகமெங்கும் பௌத்தர்களிடம் ஆழமான கசப்புக்கு வழிவகுத்தது.

பௌத்தர்கள் அந்த நிலம் புராதனமான பௌத்தத் தலமே என அகழ்வாய்வு ஆதாரங்களுடன் நிரூபித்து அந்த இடத்தின் மேல் தங்களுக்கான வழிபாட்டுரிமையைப் பெற்றார்கள். ஒரு கூட்டு நிர்வாகக்குழுவை உருவாக்கிய பிரிட்டிஷார் அங்கே மகாபோதி ஆலயம் உருவாக்க அனுமதி அளித்தனர்.

அதன்பின்னரே இலங்கையில் அனுராதபுரத்தில் இருந்து போதியின் கிளை இங்கே கொண்டு வந்து நடப்பட்டு போத் கயா பழைய புகழை அடைந்தது. இப்போதுள்ள ஆலயம் பர்மியர்களால் எடுத்துக்கட்டப்பட்டது. இந்த வளாகத்திலேயே முந்தைய ஆலயத்தின் சிறிய செங்கல் வடிவம் ஒன்று இருக்கிறது. அதை முன்வடிவமாகக் கொண்டு வரைந்து இன்றைய புதிய ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தியா சுதந்திரம் பெறும் வரை நீதிமன்றங்களில் அந்தப் பூசலை நீடிக்கச்செய்து நிலம் மீதான அதிகாரத்தை மகந்த் கைவசம் வைத்திருந்தார். 1949இல் நேருவின் தலையிடலால் அந்நிலம் கைவசப்படுத்தப்பட்டு பிகார் அரசுக்குரியதாக ஆகியது.

ஆனால் தொடர்ந்து சங்கர மடத்தின் மகந்த் தலைமையில் புரோகிதர்கள் பிரச்சினை செய்யவே அங்கே பௌத்தர்கள் வருவதும் தங்குவதும் முடியாத நிலை வந்தது. விளைவாக ஒரு சமரசத் திட்டமாக மகாபோதி ஆலயத்தின் நிர்வாகக்குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் உள்ள ஒன்பது உறுப்பினர்களில் இந்துக்களே எந்நிலையிலும் பெரும்பான்மையாக இருக்கவேண்டும் என விதி சேர்க்கப்பட்டு இன்றும் அதுவே நடைமுறையில் உள்ளது.

இன்றும் போத்கயாவின் நிர்வாகக்குழுவின் ஒன்பது உறுப்பினர்களில் ஐவர் இந்துக்களாகவும் நால்வர் பௌத்தர்களாகவும் இருக்கவேண்டும். தலைமை மகந்த் சிறப்பு உறுப்பினராக இருப்பார். குழுவின் தலைவராக கயாவின் மாவட்ட நீதிபதி இருப்பார். அவர் இந்து அல்ல என்றால் இன்னொரு இந்துவைக் குழுத்தலைவராக நியமிக்கவேண்டும். இதுவே சட்டம்.

தொடர்ச்சியாக கயா வளர்ந்துகொண்டே வந்தது. அங்கே உலகமெங்கும் உள்ள பௌத்தப் பிரிவினரின் தனித்தனி மடாலயங்களும் வழிபாட்டிடங்களும் வந்தன. போத் கயா யுனெஸ் கோவின் உலகப் பண்பாட்டுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது.

இந்த விஷயத்தில் இன்றுவரை கயாவின் புரோகிதர்கள் நடந்துகொண்ட விதம் எவ்வகையிலும் இந்து மதத்தின் தத்துவார்த்தமான மனவிரிவுக்கு உதாரணமாக இருக்கவில்லை என்பதே உண்மை. அவர்கள் அதை ஒரு சொத்தாக மட்டுமே பார்த்தார்கள். கயை வளர வளர அந்த சொத்தில் பங்குக்காகவே சண்டை போட்டார்கள். அந்த இடம் பௌத்தர்களின் தலைமையான புனித இடம் என்ற எண்ணம் அவர்களிடம் இருக்கவில்லை. அதன் வழிபாட்டுமுறைகளைக் கையகப்படுத்த இப்போதும் முயன்று வருகிறார்கள்.(*ஜெயமோகன், கயாவும் இந்துக்களும்)

பௌத்தம் இந்தியாவின் கடந்த கால சாதனை. இன்றைய பெரும் செல்வம். இந்தியா மேல் பற்றுள்ள எவருக்கும் பௌத்தம் மீதான பற்றும் மதிப்புமே இருக்க வேண்டும். பௌத்தம் இந்தியாவை விட்டு நீங்கினாலும் அது மீண்டும் இங்கே தழைப்பதற்கான இடமளிக்க வேண்டும் என்றே இந்தியா மீது பற்றுள்ளவர் நினைக்கவேண்டும். 

கௌதம புத்தர் பிறந்து 2,500 வருடங்கள் கடந்தும் ஞானோதயம் அடைந்த அவரின் போதனைகள் ஆன்ம சாதகர்களை இன்றும் வழி நடத்துகிறது.

________________________________________________________________________________

Sources: 1. http://tamil.oneindia.com/art-culture/essays/2011/18-buddha-purnima-    wisdom-nirvana-aid0090.htm/

2 . http://jeyamohan.in/?s=%E0%AE%95%E0%AE%AF%E0%AE%BE#.WRGMp8YlHv8 ஜெயமோகன், கயாவும் இந்துக்களும்

 

 

 

Save

Save

Save

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *